கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பின்கார்ப் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நேற்று (ஜனவரி 22) காலை 10 மணி அளவில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "ஓசூர் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் காலை 10 மணி அளவில் ஆயுதங்களுடன் நகை திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதில், கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தனிப்படை அமைப்பு
குற்றவாளிகளை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தகவல் அடிப்படையில், கர்நாடகாவிற்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடகா பகுதி அலுவலர்களும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். வெளிமாநில குற்றவாளிகளா என்பது குறித்து கைது செய்யப்பட்ட பிறகே தெரியவரும்" என்றார்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் பைரவி என்ற மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தில் கொள்ளை!