கிருஷ்ணகிரி: கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவரின் இடது கண்ணை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ஒசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பசவராஜ்(46). கூலித் தொழிலாளியான இவரது கண்பார்வை குறைப்பாடு காரணமாக ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கண் பார்வைக் குறைந்து, வலி அதிகரித்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில், அவருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொற்று பாதித்த இடது கண் முற்றிலுமாக அகற்றப்பட்டது.
இதுக்குறித்து தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தரவேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பத்து லட்சம் பேரில் ஒருவரைத் தாக்கக்கூடிய கருப்புப் பூஞ்சை, பசவராஜுக்கு மூக்கு வழியாக கண் பகுதிக்கு பரவி கண் பார்வை குறைப்பாடு ஏற்பட்டிருந்தது. இதனால் அவரின் இடதுபுற கண் முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து டாக்டர் நிகில் தலைமையிலான மருத்துவக்குழு 4 மணிநேர சிகிச்சைக்கு பிறகு அவரின் இடது கண் முழுமையாக அகற்றப்பட்டதுடன் கருப்புப் பூஞ்சையும் அகற்றப்பட்டது. தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு, சர்க்கரை நோய் உள்ளிட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை அதிகளவில் பாதிப்பு ஏற்ப்படுத்தும் என கூறிய அவர், கண், முக வீக்கம், பார்வை குறைபாடு, கருப்பு நிறத்தில் சளி வெளியேறுவது ஆகியன கரும்பு பூஞ்சை பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.