சேலம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கடந்த மூன்று நாட்களாக பகுதி வாரியாக, கோட்ட வாரியாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக சேலம் மத்திய மாவட்ட இளைஞரணி, மாணவரணி சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் அரசு கலை கல்லூரி முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சேலம் மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தனர். இதில் சேலம் அரசு கலை கல்லூரி மாணவ, மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகொண்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தங்களது கையெழுத்தை இட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு, திமுக, காங்கிரஸ் உள்ளிட கட்சிகள் இணைந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தினை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன பேரணி நகர செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது.
காவேரிப்பட்டினம் சந்தைப்பேட்டையில் இருந்து தேசியக் கொடியுடன் போரணியாக வந்த இஸ்லாமியர்கள் இந்தியா எங்கள் தேசம் என முழுக்கமிட்டனர். பின்னர் காவேரிப்பட்டினம் காமராஜர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கலந்துகொண்டனர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜமாத் கூட்டமைப்பு, திமுக, காங்கிரஸ் உள்ளிட கட்சியினை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர்.
திருப்பூர்
அதேபோல், திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் எதிரே இரண்டாவது நாளாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தினை அமல்படுத்தக்கூடாது என முழக்கமிடப்பட்டது. இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்' - ரஜினிகாந்த்