கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட ஒன்பது கிராம ஊர் பொதுமக்கள் ஊராட்சி செயலாரை மாற்றகோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “அஞ்சூர் ஊராட்சியில் சக்திவேல் என்பவர் ஊராட்சி செயலாளராக கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் சுகுணா வெங்கடேசன் என்பவர் பெருவாரியான வாக்குகள் பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் பதவியேற்ற நாளில் இருந்து அவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் இதுவரை எந்த அரசு தபால்களையும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களை அவருக்கு ஊராட்சி செயலாளர் சக்திவேல் தெரியப்படுத்துவதில்லை.
சக்திவேலின் தந்தை ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். அவர் தலைவராக இருந்தபோதே சக்திவேல் செயலாளராக இருந்தார். தற்போது அதே பணியில் தலைவராகிய சுதாவிற்கு எந்த வித தகவல்கள் உள்பட அவருக்குரிய மரியாதையையும் தருவதில்லை.
கிராமத்தில் இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் பொதுமக்களாகிய எங்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் வந்து சேராது. ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொது மக்களாகிய எங்கள் மனுவை பரிசீலனை செய்து சக்திவேலை உடனடியாக வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.