கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவித்த நாள் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் தளி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திரன், “விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் கட்சியான சிபிஐ சாதித்த சாதனைகள் அதிகம். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி முழுமையான சுதந்திரப் பிரகடனத்தை (சம்பூர்ண சுயராஜ்ஜியம்) வெளியிடுவதற்கு முன்பே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனப்படுத்தியது.
தமிழ்நாட்டில் தற்போது மோசடி அரசு நடந்துவருகிறது. அதிமுகவின் மீது சவாரி செய்துவரும் பாஜக தமிழ்நாட்டில் காலுன்ற கனவு காண்கிறது. அந்த கனவு ஒருபோதும் பலிக்காது. எதிர்வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவையும், அதன் மீது சவாரி செய்யும் பாஜகவையும் மக்கள் முறியடிப்பார்கள்.
விவசாயிகளை காலில் போட்டு மிதிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்கவும் இளைஞர்கள் களத்தில் இறங்கி போராட வேண்டும். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துகள். அவரது அரசியல் வருகைக்கு அல்ல, உடல் நலம் பெற மட்டும் வாழ்த்துகிறேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : கிராம சபை என்ற பெயரில் திமுக பொய்ப்பரப்புரை- கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு