கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட செலவுகளை சமாளிக்கவே மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்துவரும் நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே மாணவர்களுக்கான பள்ளிக் கட்டணங்களை தனியார் பள்ளிகள் 75 சதவிகிதம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் பெற்றோர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கக் கூடாது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்ஈ பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
அந்தப் பள்ளியில் சீருடை, புத்தகம், காலனி என அனைத்திற்கும் சேர்த்து கட்டனம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். சீருடை போன்றவை பள்ளி திறந்த பிறகு வாங்குகிறோம், தற்போதைக்கு புத்தகங்களுக்கு மட்டும் பணம் செலுத்துகிறோம் என பெற்றோர் கேட்டதற்காக அவர்களின் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பு குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்டனம் செலுத்தினால் மட்டுமே கல்வி என்று கராராக பேசுவதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கல்வி நிறுவனங்களின் சம்மந்தப்பட்டத் துறை அலுவலர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாமா? - அமைச்சரின் மாறுபட்ட பதில்களால் குழப்பம்!