கிருஷ்ணகிரி மாவட்டம், பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட கம்பாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தராமப்பா. இவரது மகன் சென்னபசப்பா (29). இவர், இன்று பெட்டமுகிலாளம் கிராமத்திலிருந்து அருகிலுள்ள நெமிலிசேரி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து அவர் இருசக்கர வாகனத்தில் மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். அய்யூர் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாமி ஏரி என்ற இடத்தில் ஒரு குட்டி யானையுடன் மொத்தம் மூன்று காட்டுயானைகள் சாலையின் குறுக்கே நின்றுள்ளது.
அப்போது வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற சென்னபசப்பாவை காட்டுயானை ஒன்று துதிக்கையால் தாக்கியது. இதில் நிலை தடுமாறிய அவர், இரு சக்கர வாகனத்தோடு சாலையிலிருந்து பள்ளத்தில் விழுந்தார்.
மார்பு, கை, கால் என, உடலில் பல இடங்களில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வேகமாக பரவும் கரோனா இரண்டாம் அலை- எச்சரிக்கும் மருத்துவர்