கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி குமுதா. அதே பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி பாலாமணி.
குமுதாவும் பாலாமணியும் தருமபுரி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று பணிமுடிந்து, இருச்சக்கர வாகனத்தில் காவேரிப்பட்டணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
பிற்பகல் 2.30 மணியளவில் அவர்கள் தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இடையூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் முன்பு நாய் ஒன்று குறுக்கே சென்றது. இதனால் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் தடுப்புச் சுவர் மீது மோதியது.
இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டுச் சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, அவர்களை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிசசை பலனளிக்காமல் குமுதா உயிரிழந்தார். பாலாமணிக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடைக்குச் சென்ற சிறுவனின் கழுத்தைக் கடித்துக் குதறிய நாய்!