சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வர்த்தக மையம்(Trade Centre) அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் இடையே வர்த்தக மையம் அமைக்க அரசு முன்வருமா என கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறை நிறுவனம் மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் இணைந்து உருவாக்கிய தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே மையம் அமைக்க கொள்கை அளவு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது" என்றார்.
மீண்டும் குறிப்பிட்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் உள்ளன.
வர்த்தக மையம் வெளிநாட்டின் நகர் வந்து செல்லும் இடமாகவும் அதிக அளவில் அன்னிய செலாவணியை ஈர்க்கும் மண்டலமாகவும் அது மாறும் என்றார்.
பின்னர் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஏற்கனவே வணிக நகரமாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்து வருகிறது. அதை மேம்படுத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. வர்த்தக மையம் என்ற ஒன்று அமைந்தால் அது எல்லா வகையான வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எனவே அது விரைவில் செய்யப்படும்" என அமைச்சர் உறுதி அளித்தார்.
ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமையவுள்ள நிலையில், வர்த்தக மையம் தொடர்பான அறிவிப்பு அம்மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெங்களூரு பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் ஓசூரில் துணை அலுவலகங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநரை 'போயா' என்றது மாபெரும் தவறு.. அமைச்சர் பொன்முடிக்கு குஷ்பு கண்டனம்!