கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி கிராமத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பணி செய்து உயிர் நீத்த கட்சி நிர்வாகிகளின் நினைவேந்தல் மற்றும் படம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைகோ, உயிர் நீத்தவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதிமுக மாநாடு வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். காஷ்மீர் அரசியல் தலைவர் ஃபரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் போன்றோரும் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற ஆட்சி அடக்குமுறை ஆட்சியாக இருக்கின்றது. புகலூர் விசுவநாதன் அவர்களை, அவர் கரூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கிறார் என்பதற்காக முகிலன் உடன் தொடர்புபடுத்தி குற்றவாளியாக்கி சிறையில் அடைத்திருக்கிறது அதிமுக அரசு. ஸ்டெர்லைட் ஆலைக்குக் கைக்கூலி வேலை பார்க்கும் எடப்பாடி அரசு, 13 பேரைச் சுட்டுக் கொன்றது. இந்த அரசு, காவல்துறையினரை வைத்து மனித உரிமைகளை நசுக்கலாம் என நினைக்கிறது. அதனால்தான் திருமுருகன் காந்தி மீது 38 வழக்குகளைப் போட்டுள்ளது.
இந்த ஆட்சி நிரந்தரம் என்று கருத வேண்டாம். வருகிற பொதுத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சி கிடையாது, திமுக ஆட்சிதான். தற்போது காஷ்மீர் பிரச்னை, சர்வதேச பிரச்னையாக மாறிவிட்டது. அது உள்நாட்டு பிரச்னையல்ல. காஷ்மீரும் கந்தக கிடங்கு பூமி ஆகிவிட்டது. போர் மேகங்கள் சூழ்ந்தால் அனைவரும் அழிந்து போய் விடுவோம். மத்திய அரசு 370 ஆவது பிரிவை நீக்கியதும், 35-ஏ பிரிவை நீக்கியதும் குளவிக் கூட்டில் கைவைத்த வேலை என்று குற்றஞ்சாட்டினார்.