கிருஷ்ணகிரி மாவட்டம் கருக்கன் சாவடி கிராமம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் எம்.பி.ஏ. (MBA) பட்டதாரியான சபரி. இவர் படித்தது என்னவோ எம்.பி.ஏ. என்றாலும், இவரது முழு கவனமும் மாடு வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என இருந்துள்ளது.
இவரது தந்தையான செல்வம், ’உனக்குப் பிடித்த தொழிலை விரும்பி செய், வெற்றியடையலாம்’ என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
இதையடுத்து மாடுகள் வளர்ப்பில் பால்பண்ணை தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் சபரி. பெரும்பாலான மாவட்டத்தில் படித்த இளைஞர் என்றாலே நகரத்திற்கு சென்று வேலையைத் தேடி ஓடும் இந்தக் காலகட்டத்தில், கடந்த ஆறு வருடங்களாக 100-க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால்பண்ணை தொழிலை செய்து ஒரு முன்மாதிரி இளைஞராகச் செயல்படுகிறார் சபரி.
இதுமட்டுமல்லாமல் நாட்டு மாடுகள், குஜராத்தின் ’கீர்’ வகை மாடுகள், உத்தரப் பிரேதேசம் மாடுகளையும் வாங்கிவளர்த்து சிறந்த சத்துள்ள பாலையும் விநியோகம் செய்கிறார்.
தனது வெற்றி குறித்து இளைஞர் சபரி கூறுகையில், ”மாடு வளர்ப்பு என்பது அரிதான பணியாகிவருகின்றது. தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள இளைஞர்கள், மாடு வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்” என சக இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
இதையும் படிங்க: தருமபுரியில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு, மாடுகள் விற்பனை அமோகம்!