கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலன் என்பவருக்கும் முகநூல் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இந்நிலையில், கல்லூரி மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பாலன் அவரை கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள தங்கும் விடுதி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பிறகு சேலத்திற்கு அழைத்து வந்த அவர், அங்கு மாணவியை விட்டுச் சென்று தலைமறைவானார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கல்லூரி மாணவி இது குறித்து கிருஷ்ணகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர்கள் சம்பவம் நடந்த இடம் பொள்ளாச்சி, எனவே பொள்ளாச்சி காவல்துறையினரிடம் புகார் செய்யுங்கள் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து மாணவி பொள்ளாச்சி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கும் புகாரை ஏற்காமல் நீங்கள் கிருஷ்ணகிரி காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கின்றனர். இவ்வாறு 2 மாதமாக அலைக்கழிக்கப்பட்டதால் வேதனை அடைந்த கல்லூரி மாணவி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் மாணவியின் உடலை உடற்கூறாய்வுக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இது தொடர்பாக பாலன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.