சென்னை: சென்னை மாநகரில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய பகுதியில் சிலர் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஜெ.ஜெ. நகர் பாரிசாலை இபி பூங்கா அருகே கடந்த மாதம் போதைப் பொருள் விற்பனைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்கிற கல்லூரி மாணவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் இருந்து 17 எல்.எஸ்.டி ஸ்டாம்ப் போதைப் பொருளும், மூன்று கிராம் ஓ.ஜி. கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடரும் கைது நடவடிக்கை
மேலும், விசாரணையில் ரெடிட் ஆன்லைன் செயலி மூலமாக போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியும், அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அரவிந்த் பாலாஜி (20), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல் (21), மறைமலை நகரை சேர்ந்த திரிசண் சம்பத் (20), ஆருணி (20) ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய சோதனையில் 94 எஸ்டி ஸ்டாம்ப், 48 எம்டிஎம்ஏ போதை மாத்திரை, 700 கிராம் ஓ.ஜி கஞ்சா, ஐந்து செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மேலும் ஐந்து பேரை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின்பு சிறையில் அடைத்தனர்.
மன்சூர் அலிகான் மகன் கைது
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முக்கிய நபரான கார்த்திகேயனிடம் ஜெ.ஜெ. நகர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கும் இவருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் (26) உட்பட அவரது நண்பர்கள் ஏழு பேரை ஜெ.ஜெ. நகர் தனிப்படை போலீசார் பிடித்து ஒரு நாள் முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர்.
மருத்துவ பரிசோதனையில் அம்பலம்
இவர்களுக்கும் போதை பொருள் விற்பனையாளர்களுக்கும் என்ன தொடர்பு? இவர்கள் போதைப் பொருள் ஏதாவது விற்பனை செய்தார்களா அல்லது பயன்படுத்தி வந்தார்களா போன்ற பல்வேறு கோணத்தில் 7 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து இவர்கள் ஏழு பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அளிக்கான் துக்ளக் உட்பட அவரது நண்பர்கள் நான்கு பேரும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற விசாரணைக்கு பின்பு அலிகான் துக்ளக் (26), சைது சாகி (23), முகமது ரியாஸ் அலி (26), பைசல் அகமது (26) ஆகிய நான்கு பேரையும் ஜே.ஜே. நகர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் வேறு ஏதேனும் போதை கும்பலுடன் தொடர்பில் உள்ளாரா போன்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.