கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்ரூத் திட்டத்தின்கீழ் புதியதாக அமைக்கப்பட்டுவரும் குடிநீர்த்திட்டப் பணிகள், ஓசூரு ராமநாயக்கன் ஏரியில் தூர்வாரும் பணிகள், கக்கனூர் பகுதி நேர நியாயவிலைக்கடை, சோதனைச்சாவடி ஆகிய மூன்று வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.
அவை முறையே ஓசூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீர் வழங்கும் பொருட்டு அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.87.91 கோடி மதிப்பில் எட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளில் ஏழு முடிவுற்ற பணிகளையும், 1 நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணியினையும், நான்கு பணிகள் முடிவுற்ற சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி என மொத்தம் 12 நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இப்பணிகள் மூலம் ஓசூரு மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 20 ஆயிரத்து 333 புதிய குடிநீர்
இணைப்புகள் வழங்குவதற்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது. அவற்றில் இதுவரை 18 ஆயிரத்து 500 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
குடிநீர் இணைப்பு வழங்கும்பொருட்டு பிரதான குழாய் இணைப்பு 57.048 கி.மீ. தூரத்திற்கு குடிநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. பகிர்மான குழாய் 135.148 கி.மீட்டர் தூரத்திற்குப் பதிக்கப்பட்டு பணிகள் முடிவுற்றன.
மீதம் உள்ள பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஓசூரு ராமநாயக்கன் ஏரியில் மழைநீரைச் சேமிக்கும்பொருட்டு பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள், கரைகள் பலப்படுத்தும் பணிகள், ஏரியை ஆழப்படுத்தும் பணிகள், அழகுபடுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு தூரிதமாக முடிக்க மாநகராட்சி பொறியாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து கக்கனூர் சோதனைச்சாவடி, கக்கனூர் பகுதி நேர நியாயவிலைக் கடையில் பொருள்கள் இருப்பு, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருள்கள் விநியோகம் குறித்தும் நேரில் ஆய்வுசெய்தார்.
இதையும் படிங்க: திண்டுக்கல் பெட்ரோல் பங்குகளில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு!