கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை மருத்துவ முகாம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், மத்திய கள விளம்பர அலுவலகம் சார்பில்
- தூய்மை பாரதம் திட்டம் இருவார விழா,
- பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைக்கு கற்பிப்போம்,
- ஒரே பாரதம்; உன்னத பாரதம்
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவியர், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஆகியோருக்கு காசநோய் தடுப்பு பெண் உரிமைகள், சட்ட ஆலோசனைகள், சுற்றுப்புற சூழல் மரம் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு அவசியங்கள் குறித்து துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கருத்தரங்கு மூலம் தனித்தனியே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்து அதில் கலந்துகொண்ட மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான திருமதி அறிவொளி பேசுகையில்,
"நாட்டில் உள்ள பல்வேறு வகையான நோய்கள் சுற்றுப்புற தூய்மையின்மை காரணமாக உருவாகிறது. தூய்மையை கடைப்பிடித்தால் 70 விழுக்காடு நோய்கள் நம்மைவிட்டு விலகும். அதனால் தூய்மை பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதன் காரணமாகத்தான் மத்திய அரசு தூய்மை பாரதம் திட்டத்தை செயல்படுத்திவருகிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் பெண்களுக்கு பாதுகாப்பும், கல்வியும் அவசியம் எனக் கூறிய நீதிபதி இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடிய நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் தனியாகச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் அத்தருணத்தில் பல்வேறு பாலியல் குற்றச் சம்பவங்களைச் சந்திக்க நேரிடுவதாகத் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள், குற்றங்களைத் தவிர்க்க அரசு அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பாக இன்று அதிகம் பயன்படுத்தக்கூடிய செல்போன் மூலம் நாம் இருக்கும் இடம் நாம் எங்கு செல்கிறோம் என்பது உள்ளிட்ட தகவல்களைத் தெரியப்படுத்தவும் அவசர நேரத்தில் உதவி, பல்வேறு செயல்களையும் உருவாக்கி அளித்துவருவதாக அவர் கூறினார்.
இதனைப் பெண்கள் தெரிந்துகொண்டு அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விழாவின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களிடையே மேற்கண்ட பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் சிறந்து விளங்கக்கூடிய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் கேடயங்கள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த விழாவில் மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் தங்கமணி, தமிழ்நாடு கிராம வங்கியின் மண்டல மேலாளர் பாஸ்கரன், கள விளம்பர உதவி அலுவலர் வீரமணி, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 450 பேர் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்க: சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்!