கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, மலைவாழ் கிராமங்களான அய்யூர், மேலூர், ஜவளநத்தம், தொழுவபெட்டா, பழையவூர், கூச்சனூர், கொடக்கரை கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் பார்வையிட்டார். பின் அவர் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்கள் சார்பில் தங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்த வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் 113குடியிருப்பு வீடுகளை புனரமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்தனர்.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிராம மக்களின் கோரிக்கைகள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். மேலும் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.