மத்தியில் ஆளும் பாஜக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்தும் இயக்கம் நடைபெற்றது.
இந்தக் கையெழுத்து இயக்கம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
மேலும், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பேச்சாளர் நாஞ்சில் ஜோசு கூறியதாவது, "வேளாண் சட்டத்தால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.
அதோடு, விலைவாசி விண்ணை முட்டும் வகையில் செல்கிறது. இந்த வேளாண் திருத்தச் சட்டத்தால், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும்தான் பயன்பெறும். இதனால், சிறு குறு விவசாயிகள் வாழ்வு அடியோடு நாசமாகிவிடும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியை தொடங்கிவைத்தார்.
இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.