கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து சமுதாயத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் ஆலோசனை நடத்தினார். இச்சந்திபின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,
“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், துணை ஆட்சியர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநில அரசின் அறிவுரைகளைத் தொடர்ந்து அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி நாடுகள், வெளி மாநிலங்கிளிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வந்தவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி மருத்துவ பரிசோதனை செய்து தங்கள் இல்லங்களில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் இரண்டாம் தேதிவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என ஆய்வு அறிக்கை வந்துள்ளது. வெளி மாநிலத்திலிருந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு, குடிநீர், உணவு பொருள்கள், வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், விழிப்புணர்வு, துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும், ஓசூர் அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 50 எண்ணிக்கை கொண்ட வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
இதனால் எதிர்காலத்தில் எந்த ஒரு நோய்க்கும் நிரந்தமாக சிகிச்சை அளிக்க முடியும். மாவட்டத்திலுள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் ரூ.1.50 கோடி மதிப்பில் அத்தியாவசியத் தேவைகளான படுக்கைகள், போர்வைகள்,மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்களுக்கு காய்கறிகள், அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. ஆகவே தங்களது பகுதியிலுள்ள மக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும்,
இது குறித்து அனைத்து சமுதாய தலைவர்கள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.