ஓசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தொழில் நிறுவனங்கள் தொழில்களை எளிமையாக்குவது குறித்தும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும், தொழில் முனைவோர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், இந்திய தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் தொழில்முனைவோர்கள் தங்களது கருத்துகளைக் கூறினர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி. சம்பத், "ஓசூர் பகுதிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பகுதியில், ஏற்கனவே தமிழ்நாடு தொழில் வர்த்தக எளிதாக்குதல் சட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மூன்று விழுக்காடு வட்டியுடன் கடன் வழங்கிவருகிறது; இதனை தற்போது ஆறு விழுக்காடாக உயர்த்தி உள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்னும் வலிமைபெறும். தமிழ்நாடு அரசுக்கு இதன் மூலம் 33 கோடி ரூபாய் அதிகப்படியாகச் செலவாகும்" என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் தொழில் துறை கொள்கை வலிமையாக உள்ளதை குறிப்பிட்ட எம்.சி. சம்பத், ஆட்டோ மொபைல் உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. ஜவுளி, தோல் பொருள், ரசாயன பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட 12 துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.