கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி (55). இவர் அதே பஞ்சாயத்தில் தூய்மைக்காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நொச்சிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மதியம் வரை மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக குப்பையை குப்பை வண்டியின் மூலம் சேகரித்து முனியப்பன் கோயில் அருகே உள்ள காலி இடத்தில் கொட்டி வருகிறார்.
இவருடன் சேர்ந்து மூன்று பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணி முதலே மிதிவண்டியில் பணியில் ஈடுபடுவதால் சோர்வு ஏற்பட்டு விடுகிறது. இதனால் சோர்வை நீக்கி பணிச்சுமையை மறக்க பழைய எம்.ஜி.ஆர்.பாடல்கள், சினிமா பாடல்கள் பாடி வண்டியில் குப்பைகளை கொட்டுமாறு நடனத்துடன் பாடி தெருத்தெருவாக குப்பை சேகரிக்கிறார்.
இவரின் இந்த செயலால் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியாக பிரித்து குப்பை வண்டியில் கொட்டுகின்றனர். இவரின் இந்த செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாரட்டிவருகின்றனர்.
இது குறித்து அருணகிரி கூறுகையில்:-தான் இந்த தொழிலை கடந்த மூன்று ஆண்டுகளாக ஆர்வத்துடன் செய்து வருவதாகவும், மக்களை ஊக்குவிக்கவும், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மேலும் தனக்கும் தன்னுடன் வேலை செய்பவர்களுக்கும் வேலை பளு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாட்டு பாடி நடனமாடி குப்பை சேகரிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரி செலுத்த வலியுறுத்தி குப்பை வண்டியில் பரப்புரை