கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாடு முழுவதும் போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இணையம் வழியாக அனுமதிச்சீட்டு பெற்று அத்தியாவசியப் பயணங்கள் மேற்கொள்வோர் பயணித்தும், வாகனங்கள் இயக்கப்பட்டும் வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து உரிய காரணங்களுக்காக அனுமதி சீட்டு பெற்று கர்நாடகா நோக்கிச் சென்ற வாகனங்களை அம்மாநில காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து ஓசூர் வருவாய் கோட்டாட்சியரிடம் விசாரித்தபோது, தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு செல்வோர் 14 நாட்கள் கட்டாயம் கர்நாடக அரசால் தனிமைப்படுத்தப்படுவதாகவும், கர்நாடக காவல்துறையினர் எல்லைப்பகுதியில் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் அதிகமாகி வருவதால், கர்நாடக மாநிலம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில எல்லைப் போக்குவரத்து நெரிசல் இரு மாநில பிரச்னையாக இருப்பதால், உயர் மட்ட அலுவலர்களிடம் நிலைமையைக் கூறி விரைவில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காவலர்களே சட்டவிரோதமாக மது விற்பனை