கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. மழையால் ஓசூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் ஆறு போல ஓடியது. மாநகராட்சிக்கு உட்பட்ட கேசிசி நகர், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அந்தப் பகுதியில் உள்ள ராஜ கால்வாய் முழுமையாக நிரம்பி வழிந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதால் குடியிருப்புப் பகுதிகளை மழை நீர் சூழ்ந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியே வர இயலாத நிலையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பால் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் பெற முடியாத நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் மழைநீருடன் கழிவு நீரும் ஏராளமாக கலந்து ஓடுவதால் சுகாதாரச்சீர்கேடும் ஏற்படும் அச்சமும் உள்ளது. ராஜ கால்வாயில் கொள்ளளவையும் தாண்டி அதிகப்படியான நீர் வெளியேறுவதால் அங்கிருந்து மழை நீர் அதிக அளவு வெளியேறுகிறது.
தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. மழை நீா் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை தீயணைப்புத்துறையினா் கயிறுகட்டி மீட்டனா். முழுமையாக மழை நீர் வடிந்த பிறகு சேதம் குறித்து தெரிய வரும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் பெய்த மழையால் தருமபுரியில் வெள்ளபெருக்கு பொதுமக்கள் அவதி