தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. மாவட்டங்களில் கரோனா பரவல் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்றுவருகிறார். இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வுசெய்தார்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ”கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தளவில் மிகக் குறைவாகத்தான் கரோனா தொற்று பரவியுள்ளது. மாவட்டத்தில் 274 பேர் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணக்கை 173 பேர். இதுவரை வைரஸ் பாதிப்பால் 7 பேர் இறந்துள்ளனர்.
11 ஆயிரத்து 919 பேருக்கு பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. வென்டிலேட்டர், முகக்கவசம், என் 95 மாஸ்க், முழுஉடல் பாதுகாப்பு உபகரணம் ஆகியன அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டிற்கு 672 கோடியே 59 லட்சம் ரூபாய் இதுவரை அளித்துள்ளது.
அதனடிப்படையில் உடனடி நிவாரண நிதியாக 312.64 கோடி ரூபாய், துணைச் சுகாதாரத் திட்டத்திற்கு 48 கோடி ரூபாய், பொது வரவு செலவுத் திட்டத்திற்கு 265 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் அமையவுள்ள கிட்டத்தட்ட 3 ஆயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவில் தனியார் எனர்ஜி நிறுவனத்திற்கு நேற்றைய தினம் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளித்தார். அவை பின்வருமாறு:
கேள்வி: கரோனா தடுப்பு மருந்து தமிழ்நாட்டிற்கு எவ்வளவு வந்துள்ளது?
பதில்: கரோனாவை முழுவதுமாக ஒழிப்பதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேள்வி: ஆகஸ்ட் 15இல் இந்த மருந்து வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?
பதில்: உங்களுக்கு என்ன சந்தேகம் உள்ளதோ அதே சந்தேகம்தான் எனக்கும். நிச்சயமாக வரும் என்று நம்புவோம்.
கேள்வி: கூட்டுறவு வங்கிகளில் கடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதா?
பதில்: அவ்வாறு எந்தக் கடனும் நிறுத்திவைக்கப்படவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் மக்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படைப் பணிகளையும் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
கேள்வி: எதிர்க்கட்சிகள் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனவா?
பதில்: எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. தினந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நோய் புதிதாக வந்துள்ளது. உங்கள் பத்திரிகையாளர்களுக்குக் கூட அதிகமான நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனே தடுக்க வேண்டுமென்றால் எப்படி தடுக்க முடியும். இந்த நோயைத் தடுக்க வேண்டுமென்றால் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அரசைக் குறை கூறிக்கொண்டே இருந்தால் முடியாது அவரவர் தனிப்பட்ட முறையில் பொதுமக்கள் மற்றும் அனைவரும் சுயக் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
மேலும் இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து கண்டுபிடித்திருந்தால்கூட பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்தி குணப்படுத்தலாம். அதை விட்டு விட்டு அரசு குணப்படுத்தவில்லை வேண்டும் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தினந்தோறும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. மேலும் அரசு தன்னார்வலர்கள் முப்பதாயிரம் பேரை நியமித்து வீடு வீடாகச் சென்று மக்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துகொண்டு, அந்த அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இன்னும் 10 நாள்களில் நோய்ப் பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. சென்னையில் படிப்படியாக இந்த நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது. என்று அவர் தெரிவித்தார்.