கிருஷ்ணகிரி: ஓசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில் ஒற்றைக் காட்டுயானை தனியாக சுற்றித்திரிந்து வந்தது. இக்காட்டு யானை அருகிலுள்ள போடூர், ராமாபுரம், ஆழியாளம், பீர்ஜேப்பள்ளி, சானமாவு, பென்னிக்கல், டி.கொத்தப்பள்ளி ஆகிய கிராமப்பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்ததோடு, அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வந்துள்ளது.
இதுதொடர்ந்து ஓசூர் சுற்றுப்புறப் பகுதிகளில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இந்த ஒற்றைக் காட்டுயானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து காட்டுயானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்காக வனத்துறையினர் அனுமதியைப் பெற்று, காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணிகளில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், இந்த ஒற்றைக் காட்டுயானை வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் தப்பி வந்தது. இந்நிலையில் நேற்று (மார்ச்.14) இரவு வனத்துறையினரும், மயக்க ஊசிகள் செலுத்தும் கால்நடை மருத்துவக்குழுவினர்களும் திருச்சிப்பள்ளி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டுயானையைக் கண்காணித்து, அதற்கு அடுத்தடுத்து இரண்டு மயக்க ஊசிகளைச் செலுத்தினர்.
பின்னர் அந்த காட்டுயானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதுதொடர்ந்து காட்டுயானையை வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விடுவதற்கான பணிகளை செய்தனர்.
இதையும் படிங்க: 'அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது' - வேட்பாளர் பேச்சு