திருப்பத்துார் மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையிலுள்ள சோதனைச் சாவடி அருகில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த ஈச்சர் மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ மூட்டைகளாக ஒரு லட்சத்து 70 ரூபாய் மதிப்புள்ள ஐந்து டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியை ஓட்டி வந்த வெலகலஹள்ளி ஏரியூரைச் சேர்ந்த விஜய் (30) என்பவரை பறக்கும் படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, திருப்பத்துார் மாவட்டம் வெலகலஹள்ளியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு ரேசன் அரிசி கடத்த இருந்தது தெரியவந்தது.
பின்னர், ரேசன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான ஓட்டுநரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.