ஓசூர் பகுதியில் நல்ல மண் வளமும், சீரான சீதோஷ்ண நிலையும் நிலவுவதால் முட்டை கோஸ், தக்காளி,பீட்ருட்,கேரட் உள்ளிட்டவை விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் காய்கறி,பழ வகைகள் உள்ளிட்டவை தமிழ்நாட்டின் மதுரை,கோயம்புத்தூர்,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடக, ஆந்திரா ,மஹாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
காய்கறிகளின் விலை அவ்வப்போது அதிகரித்தும் குறைந்தும் வந்தாலும் முட்டைக்கோஸின் விலை மட்டும் மூன்று ஆண்டுகளாகவே குறைந்த விலைக்கே விற்று வந்தது. இதனால் முட்டை கோஸ் விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், இந்தாண்டு மழையின் அளவு குறைந்ததாலும், வெயில் வாட்டி வதைத்து வருவதாலும் தண்ணீரின்றி பயிர்கள் கருகின. இதன் காரணமாக முட்டை கோஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் நாசமாகி, சந்தைக்கு முட்டை கோஸ், தக்காளி ஆகியவைகளின் வரத்து குறைந்து போனது.
இதனால், 2018 ஆம் ஆண்டை காட்டிலும் இந்தாண்டு குறைந்தபட்சம் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே முட்டை கோஸ், தக்காளிகளின் வரத்து உள்ளது.
தற்போது ஓசூர் உழவர் சந்தைகளிலேயே 100 கிலோ முட்டைகோஸ் ஒரு மூட்டை 1200 முதல் 1500 ரூபாய் வரையிலும், தக்காளி கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும், 25 கிலோ அடங்கிய ஒரு பெட்டி 800 முதல் 1000 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.