கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஓ.காரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பா (67). அவரது மகன் பசவராஜ் (34). இவருக்கு திருமணமாகி 3 மாத கைக் குழந்தை உள்ளது. ஜெயப்பா, பசவராஜ் இருவரும் மார்கெட்டில் சுமைத் தூக்கும் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இதனால் தந்தையும், மகனும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஜெயப்பா, பசவராஜ் இருவரும் உணவு அருந்தினர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக அறியமுடிகிறது. அப்போது, தன்னிலை மறந்திருந்த ஜெயப்பா ஆத்திரத்தில் பசவராஜின் பின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்துள்ளார்.
அதில், படுகாயமுற்ற பசவராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, மயங்கிய பசவராஜை அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு பசவராஜை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.
பின்னர், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தால் ஓசூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், மருத்துவமனைக்கு விரைந்துவந்த காவல்துறையினர், உயிரிழந்த பசவராஜின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். ஜெயப்பா மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தற்போது அவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.