கிருஷ்ணகிரி: சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி இன்று(ஜூலை12) திறந்து வைத்தார்.
பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர். " அறிஞா் அண்ணா, திராவிடநாடு திராவிடர்களுக்கு என்று குரல் கொடுத்தார். காலப்போக்கில் இந்த நாடு பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அனைத்து வளம் பொருந்திய மாநிலமாக வரவேண்டும் என்பதால் திராவிடநாடு சிந்தனையை ஒதுக்கி வைத்தார்.
இம்மண்ணின் மீதும் நாட்டின் மீதும் மக்கள் மீதும் திராவிட இயக்கங்களின் தலைவர் எவ்வளவு பற்று உள்ளவர் என்பதை உணர வேண்டும். ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது மாநில அரசின் அதிகாரங்கள் வரைமுறை படுத்திய அதிகாரங்களில் ஒன்றிய அரசு வரக்கூடாது என்பது அனைத்து கட்சிகளும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்று.
எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி சிந்தனையும் அதே போல தான் இருந்தது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும் பேரறிஞர் அண்ணாவின் நிலைப்பாட்டின் படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
விஷ விதையை பாரப்பாதீர்
திடீரென்று கொங்குநாடு என்று கூறி யாரையோ சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி விஷமத்தனமான சிந்தனையை விதைப்பது நாட்டுக்கு நல்லதல்ல. பாதுகாப்பு உள்ளிட்ட வகைகளில் நாடு பலமாக இருக்கவேண்டும். சக்தி படைத்ததாக உருவாக வேண்டும். சிறு சிறு மாநிலங்களாகப் பிரிகின்ற போது பலம் நிச்சயம் குறையும். கொங்கு நாடு குறித்து வலியுறுத்துபவர்களின் கட்சி தலைமை இதனை ஏற்றுக் கொள்கிறதா என்பது தெரியவில்லை. இது போன்ற கருத்துக்கு முக்கியத்துவம் தரத் தேவை இல்லை.
புதிதாக பொறுப்பேற்ற அரசு நிர்வாகத்தை முறைபடுத்த 60 நாட்கள் போதாது. மின்துறை அமைச்சர் மிகவும் அனுபவசாலி போன்று பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மின்மிகை மாநிலமாக உருவாக்கியிருந்தது. இவர்கள் பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது மின் தடை ஏற்படுவதற்கு காரணம் நிர்வாகத்தை முறையாக செயல்படுத்த திறமை இல்லாத அமைச்சராக இருக்கிறார் எனத் தெரிவித்தார்.