கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெற்றது.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் வன்னியர் சங்க போராட்டத்தின் முடிவில் அரசு எடுக்கும் நிலைப்பாட்டைப் பொறுத்து கூட்டணி அறிவிக்கப்படும் என ஜி.கே.மணி தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துப் பேசிய கே.பி. முனுசாமி, "பாமகவிற்கு சில கொள்கைகள் உள்ளன. அதை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி அனைத்து சமூக மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தற்போது, பாமகவின் கோரிக்கையை ஏற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அரசின் கடமை சரியாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ஆழமாக சிந்தித்து நிரந்தர முடிவு எடுத்தால்தான் இந்தச் சமூக பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல நீதி கிடைக்கும் வகையில் அதிமுக அரசு இருக்கும்” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலினும், அவரது தந்தையும் பொய் சொல்லியே வாக்குகளை சேகரித்தனர். இன்று அதிமுக ஆட்சியின் மீது எந்தக்குறையும் கூறமுடியாமல், மக்களைச் சந்திக்கிறோம் என்கின்றனர்.
திமுகவின் பெயரைச் சொன்னால் மக்கள் வரமாட்டார்கள் என்று கிராம சபை என்ற பெயரின் திமுக பொய்ப் பரப்புரை செய்கிறது. மக்கள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள் என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பாஜக தலைவர்களின் கருத்துக்கெல்லாம் மதிப்பளிக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்