உலகமுழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்று கடந்த 20 நாள்களாக இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட பரவல் நிலையை அடைந்திருக்கும் வைரஸ் தொற்றால் இதுவரை ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் கூடவும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வேகமாக பரவிவரும் கரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முனைப்போடு செயலாற்றி வருகின்றன. காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை என அனைத்து துறைகளும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது, மருத்துவ முகாம்கள் அமைத்து தொற்று கண்டறிதல் சோதனை மேற்கொள்வது, தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு மனவள, உடல்நல ஆலோசனை வழங்குவது, உணவுப்பொருள்கள் உள்ளிட்டவற்றை வீட்டிற்கே கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் துரித கதியில் சீராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, போச்சம்பள்ளியில் இயங்கி வரும் தீயணைப்பு மீட்புபணி நிலையத்தின் சார்பில் மருதேரி, போச்சம்பள்ளி, சந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு வீடு, வீடாகச் சென்ற தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு அளிக்கும் துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் விநியோகித்தனர்.
இதையும் படிங்க : மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் படுகாயமடைந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேர் கைது