கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் போக பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுவருகிறது. கெலவரப்பள்ளி அணையின் நீரால் இரண்டு பிரதான கால்வாய்கள் மூலம் 22 கிராமங்களில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
அணை கட்டி முடிக்கப்பட்ட பின்பு கால்வாய்களைச் சீரமைக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய்களைத் தூர்வாரும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற குடிமராமத்துப் பணிகளில் கால்வாயின் முட்புதர்கள் அகற்றி, அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை மண்கொட்டி கரைகளைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன.
இதனையடுத்து அடுத்தவாரம் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதால் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ள பணிகளை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி இன்று (ஜூலை 29) விவசாயிகளுடன் நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சியில் கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டிருந்தாலும், கால்வாய்கள் பழுதடைந்தே காணப்பட்டன. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசிற்கும், உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கும் நன்றி” என்றனர்.
இதையும் படிங்க: பாசனத்திற்காக அமராவதி அணை நிரம்ப வேண்டும்' - காத்திருக்கும் விவசாயிகள்