ஓசூர் அருகே சூளகிரியைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவரின் பசுமாடு நேற்று மேய்ச்சலுக்குச் சென்று இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பசு மாடு கிடைக்காததால் யாராவது திருடிச் சென்றிருக்கலாம் என நினைத்துள்ளார்.
பின்னர், பசுமாடு சூளகிரி ஆரம்பச் சுகாதார மையத்திலிருந்ததாக சிலர் கூறியதையடுத்து அப்பகுதியில் முத்தம்மாள் தேடிப் பார்த்த போது சூளகிரி ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் சொந்தமான ஏழு அடி ஆழ கழிவு நீர்த் தொட்டிக்குள் (செப்டிக் டேங்க்) விழுந்து கிடந்தது தெரியவந்தது.
பசுமாடு உயிருக்குப் போராடிய நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்தம்மாள் கிரேன் மூலமாகப் பசு மாட்டை பத்திரமாக மீட்டனர். பசு மாடு போல குழந்தைகள் யாரேனும் விழுந்திருந்தால் அவர்களின் நிலைமை என்ன என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சூளகிரி ஆரம்பச் சுகாதார மையத்தில் கழிவு நீர்த் தொட்டிகளைச் சரியான முறையில் மூடப்பட்டுப் பராமரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.