கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பசுமைக் குடில்கள் மூலம் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குடைமிளகாய் ரெட், மஞ்சள், பச்சை ஆகிய மூன்று நிறங்களில் சாகுபடி செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் குடைமிளகாய் சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி போன்ற வெளிநாடுகளுக்கும் டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற வெளி மாநில நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது அறுவடைக்குத் தயாரான குடைமிளகாயை கரோனா தொற்று பாதிப்பால் எங்குமே அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகளுக்குப் பல கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுள்ளது. மேலும், 75 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாரான குடைமிளகாய்களை விவசாயிகள் அறுவடை செய்து சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.
சாகுபடி செய்த குடைமிளகாய்களை விற்பனை செய்ய முடியாததால் ஆடு மாடுகள் மேயவும், குழிதோண்டி புதைக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் மூலம் கடன் பெற்று பசுமைக்குடில் அமைத்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள், ஏக்கருக்கு சுமார் 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்ததாகவும் தற்போது சாகுபடி செய்த குடைமிளகாயை விற்பனை செய்யமுடியாமல் தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆகையால் விவசாயக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டுப்புற கலைஞர்களுக்கு இறுதி சடங்காக மாறும் ஊரடங்கு: உதவுமா அரசு?