கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலைப்பகுதியிலிருந்து உற்பதியாகும் தென்பெண்ணை ஆற்றுநீர் வரத்தாக இருந்துவருகிறது. கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையின் மூலம் எட்டாயிரம் ஏக்கர் பரப்பளவும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனை நம்பி மட்டுமே விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று போகம் சாகுபடிகள் செய்துவருகின்றனர்.
தற்போது, கர்நாடக மாநிலத்தை அடுத்துள்ள ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை இல்லாத நிலையில் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியிலிருந்து 39.85 அடிக்கு நீர் இருப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில், கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையை நம்பி இருக்கும் கிருஷ்ணகிரி அணை வரையிலான 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பயிர்கள் காய்ந்து வருவதாகவும், சாகுபடிக்காக இருப்பு நீரை திறந்துவிட வேண்டுமெனவும் விவசாய சங்கங்கள் வலியுறுத்திவந்தன.
இதன் அடிப்படையில், கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 172 கனஅடி வரத்தாக இருந்தாலும், 400 கனஅடி நீரை விவசாய பாசனத்திற்காகத் திறந்துவிட தமிழ்நாடு பொதுப்பணித் துறை உத்தரவிட்டுள்ளது.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் அடுத்த 90 நாள்களுக்குச் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என அறிய முடிகிறது.
இதையும் படிங்க : அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் !