கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் பகுதியில் கல்வாரி சாபெல் என்ற விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் அனைவரையும் விடுதி காப்பாளர் சகுந்தலா கங்கமேடு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றார். தேவாலயத்திற்குச் சென்ற மாணவிகள் அனைவரும் விடுதிக்கு திரும்பிய போது அதில், 10ஆம் வகுப்பு படிக்கும் சித்ரா, ஏசுபிரியா, மற்றும் 5ம் வகுப்பு மாணவி அனுஷ்கா ஆகிய மூன்று மாணவிகளும் காணவில்லை எனத் தெரிகிறது.
இதனால் பதறிப் போன விடுதி ஆசிரியர்கள் தேவாலயப் பகுதி முழுவதும் சுற்றி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை எனத்தெரிகிறது. இந்நிலையில், தேவாலயத்திற்குப் பின்புறம் உள்ள குப்தா ஆற்றில் சென்று பார்த்த போது மூன்று மாணவிகளும் சடலமாக மிதந்து கிடந்த சம்பவம் சக மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, விடுதி காப்பாளர் சகுந்தலா வேப்பனபள்ளி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவிகளின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலாண்டு விடுமுறை விட்ட 8 நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 11 மாணவர்கள் உயிரிழந்து உள்ளானர். கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து தற்பொழுது வரை பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குட்டை ஆற்றில் மூழ்கி 6 மாணவிகள் 5 மாணவர்கள் என 11 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: