கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியாக கன்கார்டியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது.
கரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர் அனைவரும் தேர்ச்சிபெற்றதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் அதே பள்ளியில் படித்த நான்கு பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்பட 20 பேரின் தேர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது.
அரசு நிதி உதவி பெறும் பள்ளியாக உள்ள கன்கார்டியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 105 மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பில் பயின்றுவந்தனர். ஆனால், பள்ளியில் 100 விழுக்காட்டினர் தேர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக 85 மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் சார்பில் விண்ணப்பித்தனர் .
மீதமுள்ள 20 பேரும் சரியாகப் படிக்கவில்லை என்று காரணத்தைக் கூறி அவர்களை நேரடியாகத் தனித்தேர்வர்களாக கன்கார்டியா பள்ளி நிர்வாகம் சார்பில் அவர்கள் வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது பள்ளியில் பயின்ற அனைவருமே தேர்ச்சிபெற்றதாக அரசு அறிவித்துள்ள நிலையில் இவர்கள் 20 பேரின் தேர்ச்சி குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இந்நிலையில் இந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை அணுகி கேட்டபோது பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அரசு அறிவித்த பின்னர் தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெறவைப்பதாகத் தெரிவித்தனர்.
பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்காததால் பள்ளியின் முன்பு பர்கூர் - திருப்பத்தூர் செல்லும் சாலையில் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் வட்டாட்சியர் சண்முகம், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் மாணவர்களின் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததையடுத்து மாணவர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
மேலும், தங்களைத் தேர்ச்சியடைந்ததாக அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கையும்வைத்துள்ளனர்.