கரூர்: தமிழ்நாடு கலை இலக்கியப் பண்பாட்டுத்துறை சார்பில் இயங்கிவரும் கரூர் மாவட்ட இசைப்பள்ளி ஆசிரியை, பிப். 28ஆம் தேதி ஆய்வுக்கு வருகை தந்த கலையியல் அறிவுரைஞரும் பிரபல நடன கலைஞருமான ஜாகிர் உசேன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட அளவில் இயங்கிவரும் விசாகா கமிட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின்பேரில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில் மார்ச் 4ஆம் தேதி மாலை விசாரணை செய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் அறிக்கை கரூர் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாகா கமிட்டி விசாரணை: இதனிடையே, மார்ச் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு கலைப்பண்பாட்டுத் துறை இயக்குநரகத்தில் புகார் அளித்த கரூர் மாவட்ட இசைப்பள்ளி பரத நாட்டிய ஆசிரியை மாநில அளவிலான விசாகா கமிட்டி உறுப்பினர்கள், மூன்று பெண் அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் முன்னிலையில் கரூர் இசைப்பள்ளி நடன ஆசிரியை ஆஜராகி புகார் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது அவர், 'சக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் மாணவர்கள் முன்னிலையில் தன்னை மட்டும் தலைமையாசிரியை அறைக்கு அழைத்து கதவை அடைத்துக்கொண்ட ஜாகிர் உசேன் நடந்துகொண்ட விதம் குறித்து, விரிவாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஏப்.8ஆம் தேதி திறன் மேம்பாட்டுப்பயிற்சி எனும் பெயரில் ஜாகிர் உசேன் பரதநாட்டிய ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிப்பதற்கான நிகழ்ச்சியை கலைப் பண்பாட்டு இயக்குநரகம் ரத்து செய்ய வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?: தொடர்ந்து கரூர் மாவட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியை வழங்கிய கடிதத்தையும் விசாகா கமிட்டி உறுப்பினர்கள் பரிசிலீனை செய்ததாகவும், ஜாகிர் உசேன் தனது நடன ஆசிரியை பணிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் பொய்யான செய்திகளை அறிக்கையாக வெளியிட்ட ஜாகிர் உசேன் மீது உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் விசாகா கமிட்டி முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விசாகா கமிட்டியின் இறுதி அறிக்கையின் படி கலை பண்பாட்டுத்துறை கல்வியியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் மீது நடவடிக்கை அமையும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாலியல் புகார்: நடன கலைஞர் ஜாகிர் உசேன் கூறுவது என்ன?