கரூர்: அதிமுக சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் அறிமுக பயிற்சிக்கூட்டம் நேற்று நவ.20ஆம் தேதி குளித்தலை அருகே உள்ள பாப்பக்காபட்டி பகுதியில் நடைபெற்றது.
பாராளுமன்றம் நோக்கி அதிமுக எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக கரூர் மாவட்டச்செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க பூத் கமிட்டி நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.
தற்போதுள்ள தமிழக முதலமைச்சருக்கு லவ் டுடே, கலகத்தலைவன் போன்ற பொழுதுபோக்கு திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்கவே நேரம் உள்ளது. கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் இது போன்ற நிலை இல்லை.
முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களின் சொந்தத்தொகுதி கொளத்தூர் அருகே கால்பந்து வீராங்கனை உயிரிழந்தது தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னர், நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
இதே அதிமுக ஆட்சி இருந்தால், சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருப்பார்’ என எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடுமையாக திமுக ஆட்சியை சாடினார்.
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் மிக வலுவாக உள்ள திமுக, நான்கு சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு எம்.பி., தொகுதியை தன் வசம் வைத்துள்ளது.
பூஜ்ய நிலையில் உள்ள அதிமுக, கட்சியை வலுப்படுத்துவதற்கு அக்கட்சியின் கரூர் மாவட்டச்செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து அவர்களுக்கு பயிற்சி முகாமை துவக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'திட்ட செயல்பாட்டில் தமிழ்நாடு முதலிடம் பெறணும்' - முதலமைச்சர் அறிவுரை