கரூர்: அரவக்குறிச்சி அருகே உள்ள அரங்கனூர் இச்சிப்பட்டி தோட்டம் பகுதியில் கருப்பண்ண கவுண்டருக்குச் சொந்தமான தோட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக இனங்கனூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி அளித்த தகவல் அடிப்படையில், அரவக்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் இறந்த நபர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் உடல் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இறந்தவரின் உடல் அருகே கிடந்த சிறிய பாக்கெட் டைரியில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது தொடர்பு எண் இருந்துள்ளது. அவரிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில், கடந்த 20 ஆண்டுகளாக ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த நாச்சிமுத்து என்பவர் சில நாள்களுக்கு முன்னர் தனது சொந்த ஊரான கரூருக்கு செல்வதாக கூறிச் சென்றார் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இறந்த நபர் 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்படும் நாச்சிமுத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவ ஊழியர் கைது!