கரூர்: மாநகராட்சியில் பட்டாசு கழிவுகள் தெருக்களில் குவிந்து கிடப்பதால் அதனை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1874 ம் ஆண்டு துவக்கபட்ட கரூர் நகராட்சி, 149 ஆண்டுகள் பழமையான நகராட்சி, சமீபத்தில் அமைந்த திமுக அரசு கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது.
ஆனால் கரூர் மாநகராட்சி 48 வார்டுகளில் இன்னும் நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளைப் போலவே ஆமை வேகத்தில் நிர்வாக செயல்பாடுகள் இருந்து வருகிறது. சுமார் மூன்று லட்சம் மக்கள் தொகை கொண்ட கரூர் மாநகராட்சி அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கு இன்னும் அரசு சார்பில் சிறப்பு நிதி, ஒதுக்கப்பட்டு சாலை வசதி, கழிவுநீர் வசதி ஆகியவை மேம்படுத்தப்படாமல் உள்ளது.
இதனிடைய அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இரண்டு நாட்களுக்கு மேலாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் வீடு வீடாக வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காரணமாக தெருக்கள் மற்றும் சாலைகளில் பட்டாசு கழிவுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.
மற்ற மாநகராட்சிகளில் உள்ளதை போல, விசேஷ நாட்களான ஆயுத பூஜை, தீபாவளி, போகி பண்டிகை நாட்களில் குப்பைகளை அகற்ற சிறப்பு கவனம் செலுத்துவதைப் போல, கரூர் மாநகராட்சியிலும் சிறப்பு கவனம் செலுத்தி டன் கணக்கில் தேங்கியுள்ள பட்டாசு கழிவுகளை அகற்ற வேண்டும், என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கரூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் ரகுமான் கூறுகையில், ”கரூர் மாநகராட்சியில் குப்பை மேலாண்மை மேற்கொள்வதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. தீபாவளி பட்டாசுகள் வெடித்ததன் மூலம் கரூர் மாநகராட்சியில் வழக்கத்தை விட காற்று மிகவும் மாசு அதிகரித்து காணப்படுகிறது.
பட்டாசு குப்பைகள் தெருக்கள் முழுவதும் சிதறி கிடக்கிறது அதனை அகற்றுவதற்கு கரூர் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை. வடகிழக்க பருவமழை துவங்க உள்ளதால் திடீரென மழை பெய்தால் பட்டாசு கழிவுகளில் உள்ள ரசாயன வெளியேறி மண்ணில் கலந்து, நிலம், நீர் மாசு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே கரூர் மாநகராட்சி நிர்வாகத்தில் அலட்சியமாக செயல்படாமல் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் நிறுவன சாயக்கழிவுகள், கல்குவாரிகள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள் என தொழிற்சாலை புகைகளால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது அதிகளவிலான பட்டாசுகள் வெடிக்கப்பட்டு ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து அரசு கவனத்தில் கொண்டு, புகை இல்லாத போகி பண்டிகை, காற்று மாசு இல்லாத தீபாவளி பண்டிகை ஆகியவற்றுக்கு இயற்கை சார்ந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என கரூர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: சட்டவிரோத கட்டு சேவல் சண்டை : கண்டு கொள்ளாத காவல்துறை