கரூர்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்வா(24), புருஷோத்தமன் (18) ஆகிய இரண்டு இளைஞர்கள், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி தங்களது குடும்பத்துடன் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கொம்பாடிபட்டியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளனர்.
பிறகு லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் தீர்த்த குடம் எடுத்துச் செல்வதற்காக, நீராடியுள்ளனர். அப்போது விஷ்வாவும், புருஷோத்தமனும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் குளித்த பெண்கள் இருவரும் நீந்தி கரை சேர்ந்தனர்.
இதுகுறித்து முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தபோது, அவர்கள் மற்றொரு இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்ததால் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு தாமதமானதால், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது புருஷோத்தமன் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார்.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு வந்த கரூர் தீயணைப்புத் துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டு விஷ்வாவின் உடலை தேடி வருகின்றனர். இரவு நேரம் ஆனதால் மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாளை காலை மீட்பு பணி தொடரும் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பானிபூரிக் கடையில் காசு தராததால் தகராறு ; பானிபூரி வியாபாரி கொலை