கரூர் மாவட்டத்தில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் அய்யர் சாமி. இயற்கை மீது கொண்ட காதலினால் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மரங்களை நட்டு பராமரித்துவருகிறார்.
இவரது செயலை கண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், இவரைப் பாராட்டி மரங்கள் நடும் பணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக மியாவாக்கி எனும் ஜப்பானிய முறையில் மரக்கன்றுகளை நட வழிகாட்டியுள்ளார்.
இதையடுத்து அய்யர் சாமி தலைமையில் ஆயுதப்படை காவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆயுதப்படை தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் சுமார் 755 மரங்களை மியாவாக்கி முறையில் நட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் மரங்களுடைய எண்ணிக்கை குறைவதை அறிந்த அய்யர் சாமி, மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து தினம்தோறும் அதனை பராமரித்துவருகிறார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஆயுதப்படை அலுவலகத்தில் உள்ள 3,000 மரங்களுக்கு சொட்டுநீர் பாசனத்தின் மூலம் தண்ணீர் அளிக்கப்பட்டுவருகிறது.
நம்மாழ்வாருடைய கொள்கையை கடைபிடிக்கும் விதமாக அய்யர் சாமி, மரங்களுக்கு அருகில் கற்றாழையை நட்டுவைத்து தண்ணீர் இல்லா காலத்தில் அதிலிருந்து தண்ணீரை மரங்கள் உறிஞ்சிக் கொள்ளும் என்ற முறையை கையாண்டுவருகிறார்.
"முதன்முதலாக தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் மியாவாக்கி முறையில் மரங்களை கரூர் மாவட்ட காவல்துறையினர் நட்டுவருகிறோம் ( மியாவாக்கி என்பது ஜப்பானிய மொழி ). இந்த மரம் வளர்ப்பின் நோக்கம் குறைந்த இடத்தில் அதிக மரங்களை வளர்ப்பது, மூன்று அடிக்கு ஒரு மரம் என அமைத்து அடர்ந்த காடாக உருவாக்குவதுதான் மியாவாக்கி முறை. இந்த மரங்கள் அனைத்தும் கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களைக்கொண்டு நட்டு பராமரிக்கப்பட்டுவருகின்றன.
இதன் மூலம் இனிவரும் காலங்களில் நல்ல தூய்மையான காற்று, மழை வெப்பத்தின் தாக்கத் தடுப்பு போன்றவற்றிற்காக இந்த மரக்கன்றுகள் பயன்படும். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட தலைமை ஆயுதப்படை அலுவலகம் என பல இடங்களில் இந்த முறை பயன்படுத்தப்பட்டுவருகிறது. தொடர்ந்து கரூர் நகராட்சி, அரசுக்குச் சொந்தமான அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இந்த முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும் இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படும்" என அய்யர் சாமி கூறினார்.
இதையும் படிங்க...மூன்று ஆண்டுகள்.. 35 வகையான பேரீச்சை மரங்கள்... சாகுபடியில் அசத்தும் விவசாயி!