கரூரில் ஐந்து கோடி மதிப்பில் வெவ்வேறு வழித்தடங்களில் 15 புதிய நகரப் பேருந்து வழித்தடங்களைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதே போக்குவரத்துத் துறையின் நோக்கம்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. இதற்காக மத்திய அரசு நாளை தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறைக்கு விருது வழங்க உள்ளது.
அதிமுக அரசு உலகத்தரமான சாலைகளை அமைத்ததே சாலை விபத்து குறைந்ததற்கு காரணம். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வந்து சாலை விபத்துகளைக் குறைப்பது எப்படி என்று பயிற்சி எடுத்துச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது ஐந்தாயிரம் புதிய பேருந்துகள் வலம்வந்து-கொண்டிருக்கின்றன. மேலும், 2000 புதிய பேருந்துகள் கட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் ஐந்து இடங்களிலும் திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய இடங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு, எட்டு ஊராட்சி ஒன்றியக் குழு பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 100 விழுக்காடு வெற்றிபெற்றுள்ளது" என்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: திருச்சி கோட்டையைக் கைப்பற்றியது திமுக கூட்டணி!