கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை இயங்கிவருகிறது. இதனுடைய மற்றொரு கிளை கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியிலுள்ள மொண்டிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்துக்குட்பட்ட குள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் (27) ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார்.
இவர் நேற்று மதியம் ஆலையிலுள்ள குளத்தில் இறங்கி கை, கால் கழுவச் சென்றபோது குளத்தில் மூழ்கினார். உடனடியாக இதுகுறித்து மணப்பாறை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்துவந்த அவர்கள் கலைச்செல்வனின் உடலை இன்று காலை மீட்டனர். தற்போது அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.