கரூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயிலுக்கு வேல்யாத்திரை நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் கோவை மருதமலைக்கு சென்ற யாத்திரை, நேற்று பொள்ளாச்சி வழியாக பழனி கோயிலுக்கு சென்றது.
இதனைத் தொடர்ந்து, வேல் யாத்திரை இன்று (நவ.24) கரூர் மதியம் வந்தடைந்தது. அப்போது, மேளதாளம் முழங்கி, காவடி ஆட்டம் ஆடி, மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொண்டர்கள் வீரவேல் வெற்றிவேல் என்று கோஷங்கள் முழங்க, திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் எல். முருகன், பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
அனுமதி இல்லாமல், வேல் யாத்திரை நடத்தியதால், மாநில தலைவர் முருகன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாஜகவில் யாத்திரையை ஒட்டி கரூர் நகர் பகுதி முழுவதும் சுமார் 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க : கடலோர மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்