கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெரூர்-வாங்கல் பிரிவு சாலை பகுதியில் அமைந்துள்ள இடதுகரை ராஜ வாய்க்காலில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்கீழ் தண்ணீர் தடுப்பு சுவர் கட்டுதல், முட்புதர்களை அகற்றி தூர்வாருதல், வாய்க்காலின் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.
ராஜவாய்க்காலில் இடது கரை பாசன வாய்க்காலில் 1,500 மீட்டர் நீளத்திற்கு முட்புதர்களை அகற்றி தூர்வாரும் பணிகளும், வலுவிழந்துள்ள வாய்க்கால் கரைகளை உடையாதவாறு பலப்படுத்தி 130 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத்தடுப்புச்சுவர்கள் அமைக்கும் பணிகளும் என ரூ.30 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெறுகின்றன.
மேலும் கடைமடை பகுதிகளான கோயம்பள்ளி முதல் சோமூர் வரை ரூ.5 லட்சம் மதிப்பிலும் வாய்க்கால் தூர்வாரப்படுகின்றது. இந்த வாய்க்கால் மூலம் 5 ஆயிரத்து 600 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன.