கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இளைஞரணி அமைப்பாளர் இளவரசு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவில் இந்தி மொழிதான் ஒரே மொழியாக இருக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியாவிலேயே முதல் எதிர்ப்புக் குரலாக திமுக சார்பில்தான் தெரிவிக்கப்பட்டது என்றும் அத்தோடு இல்லாமல் இதனை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆர்ப்பாட்டத்தை பார்த்து பயந்து போன மத்திய அரசு, திமுக தலைவரை ஆளுநர் மூலம் அழைத்து பேசியுள்ளது. ஆளுநர்கள் முதலமைச்சரை அழைத்துப் பேசுவதுதான் வழக்கம், ஆனால் தமிழ்நாடு ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து பேசியிருப்பது திமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் எனக் கூறினார்.
மேலும், இந்தியை எதிர்த்து திமுக அறிவித்த போராட்டத்தைக் கண்டு அமித் ஷா பயந்து விட்டார். அதனால்தான் தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் திமுக விரைவில் ஆட்சி அமைக்கும் ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது உறுதி. இந்தியை எதிர்த்து திமுக போராட்டத்தை தற்காலிகமாகத் தான் ஒத்திவைத்துள்ளது. தலைமை கழகம் அறிவித்தால் இந்தியை எதிர்த்து இளைஞரணி மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தும் என்று கூறினார்.