மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கரூர் மாவட்டம் குளித்தலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமையேற்றார்.
மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன. சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை காவல் துறையினர் தடுத்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் கலந்து கொண்ட குளித்தலை வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.