கரூர்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்.19 ம் தேதி பொதுமக்கள் நேரடி வாக்களிப்பின் மூலம் நடைபெற்று முடிந்து, கடந்த பிப்.22ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் மூலம் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் தமிழகத்தில் நடைபெற்ற போது சில இடங்களில் திமுக கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவினர் கைப்பற்றி சலசலப்பை ஏற்படுத்தினர்.
அப்பொழுது கூட்டணிக்குள் ஏற்பட்ட சங்கடத்தை தவிர்க்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு கூட்டணி உடன்படிக்கை மீறி செயல்பட்ட திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் பதவியினை ராஜினாமா செய்து விட்டு தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன்படி கடந்த மார்ச் 4ல் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தேர்வான நிலையில் அடுத்த நாளே திமுக தலைவரின் அறிக்கையை ஏற்று ராஜினாமா செய்தார். இதனிடையே மீண்டும் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் மறைமுக தேர்தலுக்கான கோரம் இல்லாததால் தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் புலியூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மூன்றாவது முறையாக செப்டம்பர் 6ஆம் தேதி இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பேரூராட்சி அலுவலகத்திற்கு பேரூராட்சி சார்பில் உள்ள மொத்தம் 15 உறுப்பினர்களில் பாஜக உறுப்பினர் விஜயகுமார், சிபிஐ உறுப்பினர் கலாராணி, சுயேச்சை ஒருவர் உள்ளிட்ட 12 திமுக உறுப்பினர்கள் என மொத்தம் 15 பேர் பங்கேற்றனர்.
புலியூர் பேரூராட்சி மறைமுக தேர்தல் கூட்டம் துவங்கிய சில நிமிடத்தில் கூட்டரங்கில் இருந்து வெளியேறிய சிபிஐ 1வார்டு பேரூராட்சி உறுப்பினர் கலாராணி அலுவலக வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏடிஎஸ்பி கீதாஞ்சலி கலாராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போராட்டத்தை தொடர்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்பொழுது கூட்ட அரங்கில் இருந்து திமுக உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் திமுக 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக கூறி அலுவலகத்தை விட்டு வெளியேறினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் புலியூர் பேரூராட்சி செயலாளரும் புலியூர் பேரூராட்சி துணைத் தலைவருமான அம்மையப்பனும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரியும் காரில் ஒன்றாக கிளம்பி சென்றனர்.
அப்பொழுது செய்தியாளர்கள் சிபிஐ உறுப்பினர் கலாராணி குற்றச்சாட்டு குறித்து திமுக துணைத் தலைவர் அம்மையப்பனிடம் கேட்டதற்கு பதில் அளிக்க அம்மையப்பன் மறுத்துவிட்டார். இதனிடையே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ பேரூராட்சி மன்ற உறுப்பினர் கலாராணி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பேரூராட்சி தலைவர் பதவி இடத்தை பட்டியலின பெண்கள் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட தனக்கு, திமுக உறுப்பினர்கள் ஆதரவளிக்காமல் மூன்று முறை புறக்கணித்தனர். இதன் பின்னணியில் கரூர் மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக தான்தோன்றி ஒன்றிய செயலாளர் ரகுநாதன், துணைத் தலைவர் அம்மையப்பன் ஆகியோர் வழிகாட்டுதலுடன் திமுக உறுப்பினர்கள் தனக்கு ஆதரவு அளிக்க மறுப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், தான் பதவியில் அமரக்கூடாது என்று, திமுக உறுப்பினர்கள் தன்னை முன்மொழியவோ, வழிமொழிவோ முன்வரவில்லை. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் அளித்தும் புலியூர் பேரூராட்சி திமுக மன்ற உறுப்பினர்கள் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டனர். திமுக முதல்வர் தனக்கு இந்த பதவி இடம் வழங்க முடியாது என்று கூறட்டும் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என தெரிவித்தார்.
திமுக தலைவரின் உத்தரவுக்கு எதிராக புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுகவினர் கைப்பற்றிய சம்பவத்தால் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘தலைவன் ஒருவன் தான் என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்’ - சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை முயற்சி..!