கரூர்: தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டியில் சரவணா கிரஷர் என்னும் பெயரில் கல் குவாரி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதன் உரிமையாளர் திருப்பூர் மாவட்டம் மங்கலபட்டி அருகே உள்ள ஊடையம் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (70). இவர் நேற்று (டிசம்பர் 7) காலை குவாரியில் உள்ள லாரி ஒன்றின் மூலம் கடத்தப்பட்டார்.
இது குறித்து அவரது மனைவி பானுமதி கரூர் தென்னிலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
எதற்காகக் கடத்தப்பட்டு கொலை?
இதையடுத்து, அரவக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், பரமத்தி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் குவாரி உரிமையாளர் சாமிநாதன் தொலைபேசி எண்ணைக் கொண்டு ஆய்வுசெய்தனர்.
இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியே செல்போன் சிக்னல் இருப்பதைக் கண்டறிந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர் இரவு 7 மணியளவில் சாமிநாதன் கொலைசெய்யப்பட்டு கிடந்ததைக் கண்டறிந்தனர்.
உடலைக் கைப்பற்றிய காவலர்கள் உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் பணம் பறிக்கும் நோக்கில் சாமிநாதன் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குற்றவாளிகளை நெருங்கும் காவல் துறை
கொலையாளிகள் குறித்த சில தகவல்கள் காவல் துறையினருக்குக் கிடைத்துள்ளதால் விரைவில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள் என்று காவல் துறைத் தரப்பில் தெரிவித்துள்ளனர். கரூர் அருகே தென்னிலை கல்குவாரி அதிபர் கரூரில் கடத்திச் சென்று கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்: டிஜிபி உத்தரவு